/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alahan_0.jpg)
வழக்கறிஞர் அங்கி அணியாமலும், சட்டை பட்டன்கள் போடாமலும் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஒன்றில் அசோக் பாண்டே என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரான அசோக் பாண்டே, வழக்கறிஞர் அங்கி அணியாமலும் சட்டை பட்டன்கள் போடாமலும் வந்துள்ளார். இதனை கண்ட நீதிபதிகள், அவரை வெளியேறச் சொன்னபோது அவர் நீதிபதிகளை பார்த்து ரவுடி என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, வழக்கறிஞர் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு பலமுறை நீதிமன்றம் வாய்ப்பு அளித்த போதிலும், அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு அலகாபாத் நீதிமன்ற நீதிபதி விவேக் சவுத்ரி மற்றும் பிஆர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடந்த 2017ஆம் ஆண்டின் போது நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் மட்டுமல்லாமல் அவரது கடந்தகால நடத்தை மற்றும் சட்டச் செயல்பாட்டில் ஈடுபட மறுப்பது உள்ளிட்டவற்றுக்கு ஒரு முன்மாதிரியான தண்டனை தேவை. அதன்படி, வழக்கறிஞர் அசோக் பாண்டேவுக்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் முன் அவர் சரணடைய நான்கு வாரம் அவகாசம் கொடுக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.
பாலியல் வழக்கில், ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)