Lal Bahadur Shastri  grandson left the Congress and joined the BJP

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கக் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச்செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன.

Advertisment

ஆனால் இந்தியா கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். இதேபோன்று இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுடன் காங்கிரஸிற்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உரசல்கள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில்இணைந்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸிலிருந்து விலகி தற்போது பாஜகவில் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் சித்தாந்தம் இல்லை; பிரதமர் மோடியைத் தோற்கடிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்ன என்பதை ராகுல் காந்திதான் சொல்ல வேண்டும் என்று விபாகர் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா, அக்கட்சியில் இருந்து விலகி என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தார். இப்படி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி பாஜகவில் இணைந்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment