Lakhs of devotees thronged the Ayodhya Ram temple at once

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று(22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. ஆனால் நேற்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பல நாட்களாக அயோத்தியில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் நாட்டில் உள்ள பலரும் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.