ADVERTISEMENT

லக்கிம்பூர் வன்முறை: உ.பி. அரசு மீது அதிருப்தி - கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்!

04:02 PM Oct 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லக்கிம்பூர் வன்முறை தொடர்ப்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது. நேற்று (07.10.2021) அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? யார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

அதன்தொடர்ச்சியாக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர் ஆஜராக நாளை காலை 11 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் இப்படித்தான் நடத்துகிறோமா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், மரணம், துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, அதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் நம் நாட்டில் இதேபோல்தான் நடத்தப்படுவார்களா? என கேள்வியெழுப்பியதோடு, 302வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றஞ்சட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

இதன்பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, வன்முறை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணை இதற்குத் தீர்வாகாது என கூறியதோடு, "தற்போது களத்தில் உள்ள அதிகாரிகளைத் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அவர்களின் நடத்தை காரணமாக, சரியான விசாரணை நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றனர்.

இறுதியாக சிபிஐயை தவிர வேறு எந்த ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கலாம் என கூறுமாறு உத்தரப்பிரதேச அரசின் வழக்கறிஞரை அறிவுறுத்தியதுடன், வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT