priyanka gandhi

உத்தரப்பிரதேச மாநிலம்லக்கிம்பூரில்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர்அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, வன்முறை நடைபெற்ற இடத்திற்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில்வைக்கப்பட்டனர். இதன்பின்னர் அகிலேஷ் யாதவ் விடுவிக்கப்பட்டார். ஆனால் பிரியங்கா காந்தி இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைவிடுவிக்கக் கோரிகாங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

இந்தச் சூழலில் பிரதமர் மோடி, இன்று (05.10.2021) ஆசாதி கா மஹோத்ஸவ் (இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இந்தப் பெயரில் கொண்டாடப்படுகிறது) நிகழ்வில் கலந்துகொள்ளஉத்தரப்பிரதேசத்தின் லக்னோவிற்கு வருகை தந்துள்ளார்.லக்னோவில் நடைபெறும்நிகழ்வில் அவர், உத்தரப்பிரதேசத்தில் 75 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்குப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகளின் சாவியை டிஜிட்டல் முறையில் வழங்கவுள்ளார்.

இதனையடுத்து, உத்தரப்பிரதேசத்திற்குவருகைதரும் பிரதமர் மோடியிடம், தடுப்புக்காவலில் உள்ளபிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவிற்காக லக்னோவிற்கு வருவதாக கேள்விப்பட்டேன். (விவசாயிகள் மீது ஜீப் மோதும்வீடியோவைக் காட்டி) நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்தீர்களா?இந்த (விவசாயிகள் மீது ஜீப்பை மோதும்) நபர் ஏன் கைது செய்யப்படவில்லை? லக்கிம்பூர் கேரிக்குச் செல்ல விரும்பும் எங்களைப் போன்ற தலைவர்கள் எஃப்ஐஆர் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளபோது, இந்த நபர் சுதந்திரமாக இருப்பது ஏன் என்பதை அறிய விரும்புகிறேன்? மத்திய அமைச்சர்அஜய் மிஸ்ரா ஏன் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை?

ஆசாதி கா மகோத்சவ விழாவிற்காக நீங்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, விவசாயிகளால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை தயவுசெய்து நியாபகப்படுத்திக்கொள்ளுங்கள்மோடிஜி. இன்றும் அவர்களது மகன்கள் நமது எல்லைகளைப் பாதுகாத்துவருகிறார்கள். நமது விவசாயிகள் பல மாதங்களாக கஷ்டத்தை அனுபவித்துவருகிறார்கள். அதுகுறித்து குரலெழுப்பிவருகிறார்கள்.ஆனால் நீங்கள் அவர்களைப் புறக்கணித்துவருகிறீர்கள். லக்கிம்பூருக்கு வந்து இந்த நாட்டின் ஆன்மாவாக இருக்கும் விவசாயிகளின் வலியைப் புரிந்துகொள்ளுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை.’

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.