Skip to main content

பக்கா ப்ளான்... சினிமாவை மிஞ்சும் சம்பவம்; கணவரின் கதையை முடித்த தலைமை ஆசிரியை!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025

 

lady Headmaster incident her  husband in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32) - நிதி தேஷ்முக்(24) தம்பதியினர். சாந்தனு அரவிந்த் தேஷ்முக் ஆசிரியராக இருந்து வந்தார். அவர் பணியாற்றும் அதே பள்ளியில் அவரது மனைவி நிதி தேஷ்முக் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டாரின் ஆதரவு இன்றி இருவரும் தனியாக வசித்து வந்தனர். திருமணமான சில காலம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் திடீரென மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 

அதன் காரணமாக தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நிதி தேஷ்முக்கை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் நிதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நாளுக்கு நாள் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கின் துன்புறுத்தல் அதிகமாகவே, விரக்தியடைந்த அவரது மனைவி, கணவனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆன்லைனில் தேடி பார்த்து விஷ மாத்திரைகளை வாங்கிய நிதி தேஷ்முக் சத்து மாத்திரை என்று கடந்த 13 ஆம் தேதி கணவருக்கு கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்ட சில நிமிடங்களில் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தனியாளாக உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று நினைத்த நிதி தேஷ்முக் தனக்கு உதவி செய்யுமாறு தன்னுடைய டியூசனில் படித்த சில சிறுவர்களை அழைத்துள்ளார். அதேசமயம் நிதி, அவர்களிடம் உணர்ச்சி பூர்வமாக பேசியதில் மயங்கிய மூன்று சிறுவர்கள் உடலை அப்புறப்படுத்த முன்வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உதவியுடன் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை நிதி தேஷ்முக் வீசியுள்ளார். அதேசமயம் உடல் போலீசாருக்கு கிடைத்தாலும் அந்த நபர் யார் என்று அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மறுநாள் அந்த சிறுவர்களுடன் மீண்டும் வனப்பகுதிக்கு வந்த நிதி தேஷ்முக், பெட்ரோல் ஊற்றி உடலை தீ எரித்துவிட்டுத் திரும்பியுள்ளார். 

இந்த நிலையில் தான் சவுலாசா வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மனைவி கணவனை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து நிதி தேஷ்முக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 3 சிறுவர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்