ADVERTISEMENT

போக்சோ வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் பரபரப்பு கருத்து

06:57 PM Oct 20, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவர் 17 வயதான சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். மேலும், அவர் கடந்த 2022 ஆண்டு அந்த சிறுமியுடன் உறவு கொண்டதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அந்த இளைஞர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் உறவு கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ஆஜராகி, இருவரும் காதலித்ததாகவும், தனது விருப்பத்தின் பேரில் தான் உறவு கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்தசாரதி சென் ஆகியோர் முன்பு இன்று (20-10-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கூறியதாவது, “16 - 18 வயதினர் இடையே பரஸ்பர பாலியல் உறவு குற்றமற்றதாக்க வேண்டும். இளம் பருவத்தினர் இடையே பாலியல் உறவு இயல்பானது. ஆனால், அதன் தூண்டுதல் என்பது தனிநபர் செயலே. ஆணோ, பெண்ணோ, பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர் பாலினத்தவரின் கண்ணியம், உடலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இளம்பெண்கள் தங்கள் பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிடம் மகிழ்ச்சிக்கு இடம் அளிக்கும் போது இந்த சமூகத்தின் பார்வைக்கு அவர் தோற்றவராக கருதப்படுவார். அதேபோல், பெண்களின் கண்ணியம், உரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிக்க வேண்டியது ஆண்களின் கடமை ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT