Skip to main content

“56 இஞ்ச் மோடி அவர்களை ஏன் கண்டிக்கவில்லை?” - கார்கே தாக்கு

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Kharge criticized pm modi in uttar pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து இன்று (15-04-24) லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாடு முழுவதும் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்தியா கூட்டணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. நரேந்திர மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இந்தியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதி புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளது. ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற இந்தத் தேர்தல் முக்கியமானதாகும்

அரசியல் சட்டத்தை மாற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று கர்நாடகாவில் பா.ஜ.க.வினர் கூறினர். அதே போல், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த பலர் அரசியல் சட்டத்தை மாற்றப்போவதாகப் பேசினர். இந்த விஷயத்தில் மோடி அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 56 அங்குல நெஞ்சு தான் பலம்  என்று பேசுகிறீர்களே, அவர்களை ஏன் கண்டிக்கவில்லை?. கட்சியை விட்டு நீக்குங்கள். அரசியல் சாசனத்துக்கு எதிராக இதுபோன்று பேசக்கூடாது.

நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் அடிமைகளாகி விடுவோம். ஜனநாயகம் இல்லாமல், எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் இருந்தால், உங்கள் சித்தாந்தம் கொண்ட ஒருவரை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? பா.ஜ.கவின் எந்த பெரிய தலைவர் போட்டியிட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஐதராபாத்தில் பா.ஜ.கவின் பெண் வேட்பாளர் ஒருவர் பர்தாவை கழற்றி பெண்களின் அடையாளத்தை சரிபார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதுதான் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதா?” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்