“பிரதமர் மோடி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல...” - கார்கே கண்டனம்

Kharge condemns on What PM Modi said was not just hate speech

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kharge condemns on What PM Modi said was not just hate speech

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இன்று மோடியின் பீதி நிறைந்த பேச்சு, முதல் கட்ட முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது. மோடி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. சங்பரிவார் அமைப்புகளில் கற்றுக்கொண்டதை மோடி தற்போது செய்துள்ளார்.

அதிகாரத்திற்காகப் பொய் சொல்வது, ஆதாரமற்ற விஷயங்களைப் பற்றிக் கூறுவது, எதிரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் பயிற்சியின் சிறப்பு அம்சங்கள். இந்தியாவின் 140 கோடி மக்களும் அவருடைய பொய்யில் விழ மாட்டார்கள். "இந்திய வரலாற்றில், மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. எங்களின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும், அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியைப் பற்றி பேசுகிறது. பிரதமர் மோடிஒரு சர்வாதிகாரி. அவரது சிம்மாசனம் இப்போது அசைந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

modi Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe