Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத்தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத்தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத்தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும்தங்கள் பக்கம்ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத்தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

Advertisment

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

Advertisment

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள்.

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.