Skip to main content

“குழந்தை என்னை அம்மா என்று அழைக்கப் போகிறது...” - திருநர் தம்பதி நெகிழ்ச்சி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

A Kerala transgender couple has a baby

 

குழந்தை தன்னை அம்மா என்று அழைக்கப்போவது மகிழ்ச்சியாக உள்ளது என திருநர் தம்பதிகள் தெரிவித்துள்ளனர். 

 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜியா பாவெல் மற்றும் ஜஹாத் தம்பதி. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நிலையில் தத்து எடுத்துக்கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தது. இதனால் அவர்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

 

தொடர்ந்து கடந்த சில மாதங்கள் முன் பாவெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஜாஹத்திற்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. திருநங்கைக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

 

இது குறித்து இணையத்தில் பதிவிட்ட தம்பதி, குழந்தை நலமாக இருப்பதாகவும் குழந்தையின் பாலினத்தை தற்போது அறிவிக்கப் போவதில்லை என்றும் குழந்தை வளரும்போது அவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தம்பதியின் குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலைப் பெற்றுத் தருவதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தம்பதிக்கு ஹார்மோன் சிகிச்சையினை தொடர்வதன் வாயிலாக ஜாஹத் குழந்தையின் தந்தையாகவும் ஜியா தாயாகவும் குழந்தையினை வளர்க்க உள்ளனர்.

 

இது குறித்து ஜியா பேசும்போது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள். என்னைக் காயப்படுத்தும் விதமாக வந்த பேச்சுகளுக்கு இது பதிலாக அமையும். ஆதரித்த அனைவருக்கும் நன்றி. ஒரு குழந்தை தன்னை அம்மா என அழைக்கப்போவது மிக மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Counterfeit case The number of victims is increasing

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது. 

Counterfeit case The number of victims is increasing

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நீதிபதி கோகுல்தாஸ் சம்பவம் நிகழ்ந்த கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யான சுந்தரம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.