ADVERTISEMENT

கைதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

06:49 PM May 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநிலம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவர் மதுவுக்கு அடிமையான நிலையில் அக்கம் பக்கத்தினருடன் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று நேற்று இரவு மது அருந்திவிட்டு அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தீப்பை உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை கொட்டாரக்கரா அரசு தலைமை மருத்துவமனைக்கு சந்தீப்பை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் வந்தனா தாஸ், சந்தீப்புக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென சந்தீப், பயிற்சி மருத்துவர் வந்தனா தாஸை தாக்கியதுடன் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவரின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சந்தீப்பை பிடிக்க முயன்றபோது போலீசாரையும் அங்கிருந்த மற்ற மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதையடுத்து கொட்டாரக்கரா போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் சந்தீப்பை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வந்தனா தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இச்சம்பவத்துக்கு காரணமான சந்தீப்புக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT