Skip to main content

“பயணிகள் மீது தீ வைத்தால் நல்லது நடக்கும் என்று ஒருவர் சொல்லியதால் செய்தேன்” - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

kerala train fire incident released police investigation

 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த எலத்தூர் என்ற இடத்தில் ஆலப்புழா கண்ணூர் விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பயணிகள் சிலர் ரயில் பெட்டியிலிருந்து குதிக்க முயன்றதில் ஒரு குழந்தை உட்பட  மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக  போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரயில் பெட்டிக்கு தீ வைத்தவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்றது. அதேநேரம் இந்த தீ விபத்தில் பயங்கரவாத சதி இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு போலீசார், ரயில்வே போலீசார் இணைந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ரயிலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் டைரி ஒன்று காவல்துறையிடம் சிக்கியது. இந்த டைரியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் கிடைத்தன. அதில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபரின் படத்தை காவல்துறை வெளியிட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சைருக் சபி என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியை சேர்ந்தவர் என்பதும், முதலில் டெல்லியில் இருந்து மும்பைக்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து வேறொரு ரயிலில் கேரளா வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையின் போது, "கேரளாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இறங்கினேன். ஆனால் அது எந்த ரயில் நிலையம் என்று எனக்கு தெரியாது. அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் 2 பாட்டில்களில் பெட்ரோலை வாங்கி கொண்டு கண்ணூர் செல்லும் ரயிலில் ஏறினேன் அதன் பின்னர் தான் பயணிகள் மீது தாக்குதல் நடத்தினேன். இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று ஒருவர் கூறியதால் தான் இவ்வாறு செய்தேன்" என்று சைருக் சபி கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் போலீசாரை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தொடர்ந்து, இவருக்கு ஏதேனும் தீவிரவாத தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்