/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (39).jpg)
கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று கேரளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், கேரள சட்டசபையில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெற்றிபெற்ற ஏ.ராஜா என்ற சட்டமன்ற உறுப்பினர் "ஏ. ராஜா ஆகிய நான்" எனக் கூறி தனது தாய்மொழி தமிழில் பதவியேற்றுக்கொண்டார். ஏ.ராஜா தமிழக எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் என்ற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம் பகுதியிலிருந்து தேர்வாகியுள்ள ராஜாவுக்கும் தாய்மொழி தமிழே ஆகும்.
ஏ.ராஜா -வின் இந்த பதவியேற்பு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி தமிழ்நாட்டினரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அந்தவகையில், ஏ.ராஜா தமிழில் பதவியேற்றதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)