Skip to main content

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் கேரள அரசு போராட்டம்; முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Kerala govt struggle in Delhi to condemn central govt CM Pinarayi Vijayan participated

கேரள அரசு கடன் வாங்குவதில் உச்சவரம்பு விதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தப் போராட்டத்தின் போது முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதற்கு எங்கள் வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்து, இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இந்தப் போராட்டத்தின் மூலம் மாநிலங்களை சமமாக நடத்துவதை உறுதிசெய்ய இன்று மீண்டும் ஒன்றிணைந்த போராட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்தப் போராட்டம் சமநிலையை நிலைநாட்ட பாடுபடும். மத்திய மற்றும் மாநில உறவில் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்புக் கடித தினமாக இருக்கப் போகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (07.02.2024) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று வெள்ள நிவாரண நிதி வழங்காதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரியும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியும் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி. ஆர். பாலு எம்.பி. தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று (08.02.2024) சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.