
2025-2026 கல்வியாண்டின் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடப்புத்தகங்கள் இல்லை என கேரளா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள், தற்போது கோடை விடுமுறையில் இருக்கின்றனர். வருகிற ஜூன் மாதத்தில் 2025-2026ஆம் கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், மாணவர்களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வியாண்டின் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சமூக விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தவிருப்பதாக கேரளா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரளா கல்வி அமைச்சர் வி.சிவண்குட்டி தெரிவித்ததாவது, “2025-2026 கல்வியாண்டின் இரண்டு வாரங்களுக்கு, குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிக்கப் போவதில்லை. ஆனால் பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் விவாதங்களை நடத்துவோம். போதைப்பொருள் துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறும். இரண்டு வாரங்களில் உள்ளடக்கப்படும் தலைப்புகளில் போதைப்பொருள் பயன்பாடு, வன்முறை நடத்தைகளைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், உணர்ச்சிக் கட்டுப்பாடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு ஆகியவை அடங்கும்.
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி இரண்டு வார அமர்வுகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்பார்கள். அதே நேரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு இதேபோன்ற திட்டம் இருக்கும். கலை, விளையாட்டு மற்றும் சமூகப் பிரச்சினை கல்விக்கு போதுமான நேரத்தை உறுதி செய்வதற்காக பள்ளிகளும் தங்கள் கால அட்டவணைகளை மாற்றியமைப்பார்கள்” எனத் தெரிவித்தார். சமூக பிரச்சனைகள் குறித்து மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த முயற்சி நாட்டிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.