veena george

Advertisment

இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பிவருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக ஆளாத 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு நாம் இணைந்து அழுத்தம் தர வேண்டும் என கோரியிருந்தார்.

இந்தநிலையில்தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்முன்மொழிந்த இந்த தீர்மானத்தில், "முந்தைய காலங்களில், ஆபத்தான தொற்று நோய்களை எதிர்ப்பதற்காக இலவச தடுப்பூசிகள் ஒரு தேசிய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.இருப்பினும், நமது வழக்கமான நடைமுறைக்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. இலவச தடுப்பூசிகளை வழங்குவதற்குப் பதிலாக, சந்தையில் இருந்து தடுப்பூசிகளை வாங்குமாறு மத்திய அரசு கூறுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தடுப்பூசிகள் குறைந்த அளவு கிடைப்பதையும், தடுப்பூசிகளுக்கான அதிக தேவையையும் தடுப்பூசி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. இந்தச் சூழலில், கட்டாய உரிமம் வழங்குவதன் மூலம் பொதுத்துறையில் உள்ள மருந்து நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்பட வேண்டும். தடுப்பூசிகளுக்கான செலவினங்களைப் பயனற்றது என்று கருதக்கூடாது. இது, வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும். வர்த்தகம், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளும்மீண்டும் தங்கள் காலில் நிற்க இது உதவும். இதுபோன்ற சாத்தியத்தை இழந்துவிடக்கூடாது," என கூறப்பட்டுள்ளது.

Advertisment

தடுப்பூசி விவகாரம் தொடர்பாக, ஒரு மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.