Skip to main content

கேரள வரதட்சணை கொடுமை- கணவருக்கு 10 ஆண்டு சிறை! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Kerala dowry- Husband jailed for 10 years!

 

கேரளாவையே உலுக்கிய வரதட்சணை கொடுமை வழக்கில் இளம்பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன்- சஜிதா தம்பதியின் இளைய மகள் விஸ்மயா. ஆயுர்வேதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற விஸ்மயாவுக்கு 21 வயதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூபாய் 10 லட்சம் மதிப்புகள் டொயோட்டோ யாரிஸ் கார் என கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணை போதாது எனக் கூறி பெரிய சொகுசு கார், அதிகமாக பணம் வேண்டுமென திருமணமான சில நாட்களிலேயே விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் கிரண்குமார். 

 

தினந்தோறும் அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியிருக்கிறார் கிரண்குமார். பொறுத்துப் பொறுத்து பார்த்த விஸ்மயா தன் தந்தையின் இயலாமையை எண்ணி திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், துன்புறுத்தல்களை வாட்ஸ் அப் மூலம் உறவினருக்கு அனுப்பியிருக்கிறார். 

 

உறவினர் அழைத்துச் செல்வதாகக் கூறிய, அடுத்த நாளே விஸ்மயா தற்கொலை செய்திருக்கிறார். கேரள மாநில காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பின்னர், 42 சாட்சிகள், 102 ஆவணங்கள் மூலம் விஸ்மயாவின் தற்கொலைக்கு காரணம், கிரண்குமார் தான் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி, கிரண்குமாருக்கான தண்டனை இந்த சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும் என கூறினார். அதன்படி, கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தண்டனை விவரங்களை அறிவித்தார். தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு ரூபாய் 12.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.