Skip to main content

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா உறுதி!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

KERALA CM PINARAYI VIJAYAN TEST POSITIVE FOR CORONAVIRUS

 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

 

இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், கோழிக்கோடுவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முதல்வருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, "கரோனா உறுதியான போதிலும், முதல்வர் பினராயி விஜயனுக்கு முக்கிய மருத்துவப் பிரச்சனை ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் ஏற்கனவே, கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஏப்ரல் - 6 ஆம் தேதி முதலவர் பினராயி விஜயனின் மகளுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது அவரின் தந்தையும், முதல்வருமான பினராயி விஜயனுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.