Skip to main content

“ஆளுநர் விரும்பும் மோதல்களை உருவாக்க முடியாது” - கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Kerala Chief Minister Pinarayi Vijayan crictized kerala governor arif khan

சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, கேரள ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி ஆளுநர் ஆரிஃப் கான் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாகப் பேசியிருந்தார். மேலும் அவர், கேரளா முதல்வர் என்னை தாக்க சதி செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் அதற்காக வேலை செய்ய வேண்டும்; சங்பரிவார்களுக்காக அல்ல என்று கூறி அம்மாநிலத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்து கடந்த 18 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அதேபோல், ஆளுநர் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், “முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற பேனர் வைத்திருக்க முடியுமா?

கேரளா போலீஸ் இந்தியாவில் தலைசிறந்ததாகும். ஆனால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த சிறப்புமிக்க போலீஸ் துறையை களங்கப்படுத்திவிட்டார். அவருடைய உத்தரவுக்கு அடிபணிந்துதான் போலீஸ் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாணவர்கள் அமைப்பினர் என்னை காயப்படுத்தினால், இங்கே வாருங்கள். அவர்கள் ஏன் இங்கு வரவில்லை? ஏனென்றால், அவர்கள் மாணவர்கள் அல்ல. அனைத்து மாணவர்களும் எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். வேறு எந்த மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று பேசியிருந்தார். 

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று (21-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார். அவரது வலையில், இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள். மாணவர் அமைப்புகளுக்கு எதிராக ஆளுநர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மாணவர்கள், அவரைப் போல் தங்களது தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் அமைதியாக இருக்கின்றனர். இந்த அமைதியான மாநிலத்தில் ஆளுநர் விரும்பும் அளவிற்கான பிரச்சனைகளையும், மோதல்களையும் உருவாக்க முடியாது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.