/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2348.jpg)
கல்விக்கும் பட்டம் பெறுவதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை என்பார்கள். அந்த வகையில்தான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தாயும் மகளும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்து தற்போது ஒன்றாக வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளனர்.
கேரளமாநிலம், ஆலப்புழ காயங்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மாத்யூ தோமஸ். இவருடைய மனைவி பத்தனம்திட்டாவைச் சோ்ந்த மரியம் மாத்யூ. இவர், மாவேலிக்கர பிஷப் மூர் கல்லூரியில் படித்த பட்டதாரி ஆவார். இவர்களுடைய மகள் சாரா எலிசபெத்தின் படிப்புக்காக திருவனந்தபுரம் மண்ணந்தலயில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த நாளிலிருந்தே கணவரைப் போன்று வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை மரியம் மாத்யூவுக்கு இருந்தது. அதற்காக அவர் 22 வருடங்களாகக் காத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த மகள் சாரா எலிசபெத் 2016இல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் 5 வருட படிப்பான எல்.எல்.பி.யில் சோ்ந்தார். அப்போது தாய்க்கு இன்னும் ஆசை கூடியது. இதையடுத்து மகளுக்கு இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு படிப்பு தொடங்கியதும் மரியம் மாத்யூ ஏற்கனவே டிகிரி முடித்திருந்ததால் அவருக்கு எல்.எல்.பி படிக்க மூன்று ஆண்டுகளே போதும். இதனால் 2018இல் மகளுடன் அதே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் மரியம் மாத்யூ.
கல்லூரியில் அந்த மூன்று ஆண்டுகளும் தாயும் மகளும் தோழியாகவேதான் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் 2021நவம்பரில் படிப்பு முடிந்து தேர்வில் கல்லூரி அளவில் இருவரும் முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிபெற்று அசத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் கடந்த 3ஆம் தேதி திருவனந்தபுரம் வஞ்சியூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தங்களைப் பதிவு செய்தனர். அப்போது அனைத்து வழக்கறிஞர்களும் தாய்க்கும் மகளுக்கும் வாழ்த்துகளைக் கூறினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)