Skip to main content

ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவருக்கு கரோனா உறுதி!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

farooq abdullah

 

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான இவர், ஜம்மு காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 83 வயதான ஃபாரூக் அப்துல்லா, இம்மாத தொடக்கத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.

 

இந்தநிலையில், அவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகனும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஃபாரூக் அப்துல்லாவிற்கு சில கரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

மேலும் உமர் அப்துல்லா, "கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வரை, நான் எனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோடு தனிமைப்படுத்திக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும், கண்டிப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதால் எந்த பயனும் இல்லை” - இந்தியா கூட்டணி தலைவர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 India Alliance leader omar abdullah says There is no point in criticizing PM Modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தங்களுக்கான ஆதரவை பெருக்கி வருகின்றன. மேலும், தொகுதி வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் இணைந்துள்ளார். 

இந்த நிலையில், அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, “மோடிக்கு குடும்பம் இல்லை” என்று கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் பலர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று மாற்றி எதிர்வினையாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று (09-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், லாலு பிரசாத் யாதவ்வின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால், நமக்கு எந்தவித பயனும் இல்லை. இதுபோன்ற கோஷங்கள், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி, வழிமறிக்க ஆளில்லாத கோல் போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை அவர் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் தான் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லை” என்று கூறினார்.

Next Story

இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு; மேலும் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Announcement that a jammu kashmir party will compete alone from India Alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. 

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. 

முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. இதனையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, வருகிற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை” என்று கூறினார்.