தென் இந்திய மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஒரு மாநிலம் கர்நாடகா. சுதந்திர இந்தியா வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அரசியல் அதிசயங்கள் கர்நாடகத்தில் மட்டும் எளிதாக நடக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இது கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் விநோதம். குறிப்பிட்டுசொல்ல வேண்டுமானால் இந்த 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே கர்நாடகத்தின் முதல்வராக தங்களுடைய முழு பதவி காலத்தையும் நிறைவு செய்துள்ளார்கள்.

Advertisment

அந்த வகையில், ஹனுமந்தையா தொடங்கி குமாரசாமி வரை சுமார் 20-க்கும் அதிகமானவர்கள் கர்நாடக முதல்வராக இருந்துள்ளனர். 1952-ல் மைசூர் மாகாணத்தின் முதல்வராக இருந்த ஹனுமந்தையா 4 ஆண்டுகள் 142 நாட்கள் பதவியில் இருந்தார். அதனை தொடர்ந்து முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, ஜே.எச். பாட்டீல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா,சதானந்தா கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என எந்த முதல்வருமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. சித்தராமையா 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளும் முதல்வராக இருந்தார்.

 karnataka political issues

Advertisment

அதற்கு முன்னர் நிஜலிங்கப்பா மற்றும் தேவராஜ் அர்ஸ் ஆகிய இருவரும் கர்நாடக முதல்வராக தங்களுடைய முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தனர். இதில் என்ன வியப்பு என்றால், தற்போது முதல்வராக பதவி ஏற்க முயலும் எடியூரப்பா கூட இதற்கு முன்பு மூன்றுமுறை முதல்வராக இருந்திருந்தாலும் தன்னுடையமுழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. இந்நிலையில்,11 ஆண்டுகளில் 4-வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா. இந்த அரசு முழு பதவிகாலம் வரை பதவியில் இருந்தாலும் 4 ஆண்டுகளுக்கும் குறைவான வருடங்களே முதல்வராக எடியூரப்பா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.