கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று (19/07/2019) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவின் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும் வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்கள், இரவு உணவை சட்டப்பேரவை வளாகத்தில் அருந்தி, அங்கேயே உறங்கினர். சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உறங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கிய நிலையில், ஆளுநர் உத்தரவை சபாநாயகர் ஏற்காததால், ஆளுநர் மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு கெடு விதித்துள்ளார். மேலும் சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் இருந்தவாறே உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசியலில் நீடித்து வந்த சிக்கல், இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.