காரை முந்திச் சென்றதால் ஆத்திரம்; முஸ்லிம் குடும்பம் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பா.ஜ.க எம்.பி!

Karnataka Former BJP MP attacks Muslim family after overtaken car

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க எம்.பி, ஒரு முஸ்லிம் குடும்பத்தைத் தாக்கி சாதி ரீதியான துஷ்பிரோயம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹலேயானஹள்ளியைச் சேர்ந்தவர் சைஃப் கான். இவர் கடந்த 23ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் துமகூருவில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். நிஜகல் அருகே வந்த போது, அவர்களின் வாகனத்தை வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர். அதில் தன்னை துப்பாக்கிக்காரன் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு நபர், சைஃப் கானை உடல் ரீதியாகத் தாக்கியுள்ளார். மற்றொரு நபர், சைஃப் கானின் சகோதரர் சல்மான் கானை காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். மூன்றாவது நபரான முன்னாள் பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே, ‘இந்த குடும்பம் சப்ரு குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்களைத் தாக்குங்கள்’ என்று தாக்குதலை தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ‘சப்ரு’ என்ற சொல், கர்நாடகாவில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் ஒரு வார்த்தையாகும்.

தாக்குதல் குறித்து கேள்வி கேட்ட சைஃப் கானின் தாயாரை, அனந்தகுமார் ஹெக்டே கழுத்தைப் பிடித்து,தலையில் அடித்து தரையில் வீசியதாகக் கூறப்படுகிறது. சைஃப் கானின் மாமா இலியாஸ் கானையும் ஹெக்டே தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, சைஃப் கானின் குடும்பம் பலத்த காயங்களுடன் தபாஸ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சைஃப் கான் போலீசில் புகார் அளித்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் முன்பே சைஃப்ன் கானின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, முன்னாள் பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஹெக்டேவின் காரை சைஃப் கான் முந்திச் சென்றதால் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே யாரையும் தாக்கவில்லை என்று போலீசார் எனக்குத் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹெக்டே சம்பந்தப்பட்டாரா? இல்லையா? என்பது விசாரணையின் மூலம் தீர்மானிக்கப்படும்’ என்றார்.

former MP karnataka viral video
இதையும் படியுங்கள்
Subscribe