Skip to main content

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கைது

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Karnataka Congress Senior Leader Siddaramaiah Arrested

 

லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்ஏ.வை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கர்நாடகாவின் சென்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விருபாக்‌ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் கர்நாடகாவின் மைசூர் சோப் நிறுவனத்தின் வாரியத் தலைவராக இருக்கிறார். கர்நாடகாவில் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் துறைக்கு ரசாயனப் பொருட்களை வாங்குவதற்கு பல கோடி ரூபாய்க்கு அண்மையில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. டெண்டரை வழங்க ஒருவரிடம் 81 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பிரசாந்த். முதற்கட்டமாக 40 லட்சம் ரூபாய் தர முன்வந்துள்ளார் டெண்டரை எடுக்க வந்தவர்.

 

இதனையொட்டி பெங்களூர் கிரசன்ட் சாலையில் உள்ள விருபாக்‌ஷப்பாவின் அலுவலகத்தில் மகன் பிரசாந்த் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார். உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் பாஜக எம்எல்ஏவின் அலுவலகத்தில் இருந்து கட்டுக் கட்டாக மறைத்து வைக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். லஞ்சம் தர வேண்டியவர்களின் விவரங்களை பிரசாந்த் ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்த நிலையில், அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் வாயில் போட்டு விழுங்க முயன்றுள்ளார். துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அந்த காகிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

தொடர்ந்து பிரசாந்தை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார் அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் ரொக்கப் பயணத்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தமாக எட்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Karnataka Congress Senior Leader Siddaramaiah Arrested

 

கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில் எந்த ஒரு அரசியல் குறுக்கீடும் இல்லாமல் விசாரணை நடக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்நிலையில், லஞ்ச புகாரில் தொடர்புடைய பாஜக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பா கைது செய்யப்பட வேண்டும் என சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை கர்நாடக காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்