கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்து வருவதால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை சந்திக்க, அம்மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா சென்றார். அப்போது ஹோட்டலில் உள்ள மைதானத்தில் சக எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அதனைத் தொடர்ந்து நேற்று (16-07-2019) இரவு பாஜக எம்.எல்.ஏக்கள் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம், இன்று (17-07-2019) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உற்சாகமாக இருப்பது, ஆளும் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.