Skip to main content

மாஸ்க் அணியாததால் ஆடு கைது செய்யப்பட்டதா..? - காவல்துறை விளக்கம்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
jk

 

 

கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அரசு இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் சிலர் அதனை செய்ய மறுக்கிறார்கள். மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் மாஸ்க் அணியாமல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உ.பி. மாநிலம், கான்பூரை சேர்ந்த ஒருவருடைய ஆட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஆடு மாஸ்க் அணியாமல் இருந்ததால் அதனை காவல்துறையினர் கைது செய்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆட்டின் உரிமையாளர் மாஸ்க் அணியாததால், ஆட்டை காவல்நிலையம் கொண்டு சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நேரத்தில் 34 ஆடுகள் திருட்டு...வாழ்வாதாரம் போச்சே...கண்ணீர் விடும் மூதாட்டி!

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

goats incident police investigation in pudukkottai district

 

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு முன்பு  வயல்வெளியில் கிடையில் அடைக்கப்பட்டிருக்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக லாரிகளில் திருடிச் சென்றனர். இப்படி கூட்டம் கூட்டமாக திருடப்படும் செம்மறி ஆடுகள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முந்திரிக்காடுகளில் நிற்கும். முடிந்தவர்கள் ஆடுகளை மீட்டனர். முடியாதவர்கள் இழந்து போனார்கள்.

 

கடந்த சில வருடங்களாக மொத்தமான ஆடு திருட்டுகள் குறைந்து, விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை திருடிச் செல்லும் பலர் உருவாகிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு படை அமைத்து சிறிதளவு ஆடுகள் மீட்கப்பட்டாலும், கூட தொடர் திருட்டுகள் இன்றுவரை குறையவில்லை. வீடுகளில் ஆடுகளை திருடுவோர் அங்கு நிறுத்தி இருக்கும் பைக் பிளக் வயர்களை துண்டித்துவிட்டு திருடிச் செல்லும் நூதன வேலைகளையும் செய்கின்றனர்.

 

இன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகம் ஆவணம் பெருங்குடி கிராமத்தில் ஆரோக்கியசாமி - மதனமேரி தம்பதி தங்களின் வாழ்வாதாரத்திற்காக 38 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தனர். போன வாரம் பக்கத்து ஊர் வியாபாரியும் அறந்தாங்கி வியாபாரியும் வந்து குறைந்த விலைக்கு கேட்டதால், ஆடுகளை விற்காத வயதான தம்பதி இன்று அதிகாலை 02.00 மணி வரை விழித்திருந்து காவல் காத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எழுந்து பார்த்த போது கிடையின் கதவு திறந்து கிடக்க 38 ஆடுகளையும் காணவில்லை.

 

ஆடுகள் காணாமல் முதியவர்களின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தேடிய போது 2 கி மீ தாண்டி புதருக்குள் 4 ஆடுகள் பதுங்கிக்கிடந்தது. மற்ற 34 ஆடுகளும் காணவில்லை.

 

நன்கு விபரமறிந்த திருடர்கள் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்து தூரத்தில் நின்று கொண்டு கிடையில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கிடையின் தட்டிக் கதவை  திறந்ததும் மேய்சலுக்கு போறது போல அத்தனை ஆடுகளும் சத்தமில்லாமல் வெளியே செல்ல குறிப்பிட்ட தூரத்தில் ஆள் இல்லாத இடத்தில் வைத்து மொத்த ஆடுகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

 

வாழ்வாதாரம் இழந்து கஞ்சி தண்ணீர் இன்றி கதறிக் கொண்டிருக்கும் முதிய தம்பதி மீமிசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போனவாரம் ஆடுகள் வாங்குவது போல வந்து கிடையை பார்த்துச் சென்றவர்களை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள் கிராம இளைஞர்கள். இப்படி மீண்டும் தொடர்ந்துள்ள ஆடுகள் திருட்டிற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைப்பார்களோ.. பாவம் ஏழை கிராமத்து மக்கள்.


 

Next Story

கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதால் 30- க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

temple goats and dog incident peoples

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் பா.விராலிப்பட்டி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆட்டுக் குட்டிகளை விடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆண்டு முழுவதும் பக்தர்களால் வழங்கப்படும் ஆட்டுக்குட்டிகள் ஆடி மாத திருவிழாவின் போது பலியிட்டு, அதனை சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. 

 

தற்போது ஆடி மாதம் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் ஆட்டுக்குட்டிகளை கோயிலுக்கு நேர்த்திக் கடனாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் ஆட்டுக் குட்டிகளை நாய்கள் கடித்து குதறும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் 30- க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக பலியாகி உள்ளன.

 

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "ஆடுகளை நாய்கள் கடிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்கள் கொண்டு வரும் ஆடுகளை வைத்துதான் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த காலங்களில் கோயில் கிராமத்து பொதுமக்கள் வசம் இருக்கும். ஆடுகளை முறையாக பராமரித்து வந்தோம்.

 

தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் வந்தவுடன், ஆடுகளை பராமரிப்பதில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, ஆடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் கோயிலை கிராம மக்களிடம் மீண்டும் அறநிலையத்துறை ஒப்படைத்து விட வேண்டும்" என கோரிக்கையை வைத்தனர்.