ADVERTISEMENT

“இதுதான் ஜனநாயகமா?” - கனிமொழி எம்.பி. ஆவேசம்

04:52 PM Dec 14, 2023 | mathi23

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ஜோதிமணி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் அவர்களுக்கு பார்வையாளர்கள் சீட்டு வாங்கி கொடுத்த எம்.பி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வழக்கில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். விசாரணையை கூட முழுமையாக நடத்தப்படாமல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், பார்வையாளர் சீட்டு வாங்கி கொடுத்த எம்.பி. இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அவர் எங்களுடன் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறார்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது பிரதமரும், உள்துறை அமைச்சரும் சபைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்கிறார்கள். முதலில் 5 பேரை சஸ்பெண்ட் செய்து, பின்னர் ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்தனர். இது எந்த வகையில் நியாயம்? இதுதான் ஜனநாயகமா? எங்களது போராட்டம் நியாயமானது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT