
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அவையில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடும் அமளி நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று கூடிய கூட்டத்தொடரில் இரயில்வே திருத்த மசோதா 2024 குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் கடும் கோபமாகப் பேசினார்.
அதில், “ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதை போலவே, இரயில்வே திருத்த மசோதா 2024 விசயத்திலும் நடந்து கொள்கிறது. நாட்டிலுள்ள மற்ற அனைத்து இரயில்வேகளை விட, தெற்கு இரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட இரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம், மிக மோசமானதாக இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டும்போது இரயில்வேதுறையை தனியார் மயமாக்கலை முன்மொழிகிறது ஒன்றிய அரசு. இப்படி இரயில்வேதுறையை ஒன்றிய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக இரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதைக் கருத்தில்கொண்டு இரயில்வேதுறை தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிடவேண்டும்.
எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இரயில்வே அமைச்சகம் கூடுதல் இரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டும். உடனடியாக அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் இரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கடுமையாக பேசினார். இவரது பேச்டை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வரவேற்றனர்.