The Kangana Ranaut Affair Female policeman suspended

பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்தை அந்தப் பெண் கான்ஸ்டபிள் சரமாரியாக கண்ணத்தில் தாக்கினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த மூத்த சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் பேசியிருந்ததால், பெண் காவலர் அவரை அறைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இதனையடுத்து கங்கனா ரனாவத் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவம் அது. செக்யூரிட்டி சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த பெண்மணியான ஒரு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் பணியாளர் பக்கத்தில் வந்து, என் முகத்தில் அடித்து, என்னைத் தவறாகப் பேசத் தொடங்கினார். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறினார். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் அது குறித்து கவலை கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

The Kangana Ranaut Affair Female policeman suspended

அதே சமயம் பெண் காவலர் தன்னை அறைந்தது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் கங்கனா ரனாவத் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுரை தொழில் பாதுகாப்புப்படை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு எதிராக சிஐஎஸ்எப் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி சண்டிகரின் துப்பறியும் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். சந்து சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியுடன் விசாரணை நடத்தினார்.

முன்னதாக நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் போட்டியிட்டார். இதில் இவர் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 267 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment