ADVERTISEMENT

பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய ஜோதிராதித்ய சிந்தியா...

03:06 PM Mar 11, 2020 | kirubahar@nakk…

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 22 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

2018 மத்தியப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் பதவியைப் பெற முயன்றார். இருப்பினும் கமல்நாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து தொடங்கிய மோதல் மாநிலங்களவை சீட் விவகாரத்தில் பெரிதாகி ஜோதிராதித்ய சிந்தியா பதவி விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

பாஜக கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்தவர்களில் மிகமுக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜய ராஜே சிந்தியா. அவரது மகள்கள் வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே ஆகிவரும் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால் அவரது மகனான மாதவராவ சிந்தியா காங்கிரஸில் இணைந்தார். மாதவராவ சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியாவும் காங்கிரஸிலேயே இருந்தார். விஜய ராஜே சிந்தியா இறக்கும் தறுவாயிலும் கூட மகன் மாதவராவ சிந்தியாவும், பேரன் ஜோதிராதித்ய சிந்தியாவும் பாஜக பக்கம் வரவேண்டும் என்றே அவர் விரும்பியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் பின்நாளில் தெரிவித்தன. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்து தனது பாட்டி விஜய ராஜே சிந்தியாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT