J.P. Nadda says Kejriwal should apologize to the people for yamuna river issue

Advertisment

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வரும் சூழலில், யமுனை நதி நீரில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், “டெல்லி மக்கள், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து குடிநீரைப் பெறுகிறார்கள். ஆனால், ஹரியானா அரசு யமுனையிலிருந்து டெல்லிக்கு வரும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து இங்கு அனுப்பியுள்ளது. நமது டெல்லி வாரியத்தின் பொறியாளர்களின் விழிப்புணர்வால்தான் இந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இல்லையென்றால், அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று கூறி குற்றம் சாட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதற்கிடையில், யமுனையில் விஷம் கலந்து இருப்பதாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கெஜ்ரிவால் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென ஹரியானா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “யமுனை மாசுபாட்டின் மீது ஆம் ஆத்மி கட்சி பழி சுமத்துவது அதன் திறமையின்மையையும் தோல்வியுற்ற நிர்வாகத்தையும் அம்பலப்படுத்துகிறது. பொறுப்பேற்பதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி அரசு அரசியல் ஆதாயங்களுக்காக மக்களிடையே அச்சத்தைப் பரப்பத் தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறிக்கைக்காக ஹரியானா மற்றும் டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.