ADVERTISEMENT

அஜித்பவாருக்கு கட்சியை வழங்கிய தேர்தல் ஆணையம்; “சரத்பவார் ஒரு பீனிக்ஸ் பறவை” - ஜிதேந்திர அவாத்

01:27 PM Feb 07, 2024 | mathi23

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஷிண்டே பாஜக கூட்டணியில் சேர்ந்த பின் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரத்பவார் அணி தங்கள் கட்சிக்கு புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கட்சியின் நிறுவனர் சரத் பவார் அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சரத் பவார் அணியின் தலைவர் ஜிதேந்திர அவாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். சரத் பவார் ஒரு பீனிக்ஸ் பறவை. அவர் சாம்பலில் இருந்து எழுவார். இது நடக்கப் போகிறது. இது எங்களுக்கு முன்பே தெரியும். இன்று அஜித் பவார், சரத் பவாரை அரசியல் ரீதியாக தாக்கியுள்ளார். இதற்கு பின்னால் அஜித் பவார் மட்டுமே இருக்கிறார். இதனால் வெட்கப்படுவது தேர்தல் ஆணையம் தான்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT