Jharkhand former chief minister Hemant Soran says  Ready to leave politics

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Advertisment

அதன்படி கடந்த மாதம் 31 ஆம் தேதி ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த 2 ஆம் தேதி பதவியேற்றார்.

Advertisment

அதே வேளையில், சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் இன்று (05.02.2024) சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் கூடியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பங்கேற்றார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர்.

Advertisment

முன்னதாக, இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், “என்னை அமலாக்கத்துறை 8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது. தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்டுங்கள். நில மோசடி வழக்கில் ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார். நான் கைது செய்யப்பட்டதில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது. நான் கைது செய்யப்பட்ட ஜன.31ஆம் தேதி இந்தியாவுக்கே கருப்பு தினம்” என்று கூறினார்.