Jharkhand Chief Minister in Central Jail!

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப்பதவி வகித்து வந்தவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Advertisment

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இன்று ராஞ்சியில் உள்ள பி.எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத்துறையினர் சார்பில் ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

Advertisment

ஆனால் ராஞ்சி நீதிமன்றம், இதன் மீதான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக அறிவித்தது. மேலும், ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ‘ஹாட்வார்’ எனப்படும் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.