Advertisment

புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள்!

Jewelry robbery in subsequent robbery incidents

புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது புகாரி (48). இவர் துபாயில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜின்னா (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ஒருவருக்குத் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்துவருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால்பாத்திமா ஜின்னா தனது இளைய மகளுடன் வீட்டில் தங்கியிருந்தார்.

Advertisment

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பாத்திமா ஜின்னா சில தினங்களுக்கு முன்பு தனது மகளுடன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் (22.07.2021) அவரது வீட்டின் முன்பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே இதுபற்றி பாத்திமா ஜின்னாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து பரங்கிப்பேட்டையிலிருந்து வீடு திரும்பிய அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த செயின், ஆரம், நெக்லஸ், வளையல், உள்ளிட்ட 26 பவுன் நகைகள் மட்டுமின்றி, ரூபாய் 84 ஆயிரம் ரொக்கம் (மொத்தம் ரூபாய் 12 லட்சம் மதிப்பு) ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

Advertisment

Jewelry robbery in subsequent robbery incidents

இதுகுறித்து பாத்திமா ஜின்னா வில்லியனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதையடுத்து மேற்கு எஸ்.பி. ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் பேரில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

இதேபோல், புதுச்சேரி லாஸ்பேட்டை, அசோக் நகர், ஜீவானந்தம் வீதியில் வசிக்கும் கருணாகரன் (42) என்பவர் சின்ன மணிக்கூண்டு அருகேயுள்ள பான்லே பூத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (38), பெத்து செட்டிப்பேட்டையில் உள்ள மளிகை கடையில் பணியாற்றிவருகிறார். சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற அவர்கள், மாலையில் ராஜேஸ்வரி வீடு திரும்பியபோது கிரில் கேட்டில் பூட்டு உடைக்கப்பட்டு வாசல் மெயின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி உள்ளேசென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதிலிருந்து ஆரம், நெக்லஸ், செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 22 பவுன் நகைகள் மட்டுமின்றி அரை கிலோ வெள்ளி பொருட்களும்கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். அடுத்தடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

Theft Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe