“மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரைக்கூட யாருக்கும் தெரியாது” - ஜனதா தள எம்.எல்.ஏ விமர்சனம்

Janata Dal MLA says Nobody even knows Mallikarjuna Kharge's name

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை, டெல்லி என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதே வேளையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைபிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை கூட யாருக்கும் தெரியாது என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ கோபால் மண்டல், பீகாரில் இன்று (08-01-24) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதன் பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, “அடுத்த பிரதமராக நிதிஷ்குமார் தான் வர வேண்டும். அவர் நாடு முழுவதும் பயணம் செய்து இந்தியா கூட்டணியை உருவாக்கினார். நிதிஷ்குமாரை தவிர வேறு யாருக்கும் பிரதமராகும் திறமை இல்லை. மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் கூட எனக்கு தெரியாது. அவரை பற்றி யாருக்கும் கூட தெரியாது.

ஆனால், நிதிஷ்குமார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியுமா?. பாகல்பூரில், ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால், பீகாரில் இல்லை” என்று கூறினார்.

Bihar
இதையும் படியுங்கள்
Subscribe