காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவான 370- ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்தும், கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இடதுசாரிகள் சார்பாக நேற்று நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக SUCI கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புதுவையில் சுதேசி மில் எதிரில் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் லெனின்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.