jammu kashmir encounter and army forcers

Advertisment

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்- இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்- இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.

அவர்களில் இரண்டு பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல், அனந்தநாக் மாவட்டத்தில், சஹாபாத் பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisment

இதற்கிடையே, குளிர்காலத்தைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதைத் தடுக்க, எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.