Skip to main content

‘காஷ்மீரை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார்’- அமித்ஷா ஆவேசம்

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

அமிட்ஷா

 

 

இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
 

இந்நிலயில் அமித்ஷா விவாதத்தில் பேசும்போது, “காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே; காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங். விரும்புகிறதா?. " என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
 

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம், வாதங்களை அவையில் முன்வைக்கலாம், விதண்டா வாதம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரத்து செய்வதற்குப் பதிலாக மேம்படுத்தியிருக்கலாம்...” - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித்ஷா

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Amit Shah on the Supreme Court verdict for electoral bonds

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து, தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (15-03-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பினர். தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

பாஜக ஆட்சியில் இருப்பதால் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால், பா.ஜ.க பலனடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இவருக்கு யார் இதை எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கிடைத்தது. மொத்த அரசியல் கட்சிகளின் பத்திரங்கள் எண்ணிக்கை ரூ.20,000 கோடி. அப்படியென்றால் மீதி ரூ.14,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எங்கே போனது?” என்று கூறினார். 

Next Story

“அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” - அமித்ஷா அதிரடி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Amit Shah said State governments have no power to stop CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சி.ஏ.ஏ சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (14-03-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சி.ஏ.ஏ சட்டத்தை கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பல முறை கூறியிருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம். சி.ஏ.ஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பிரிவினையின் காரணமாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் தங்கி, மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு வர முடிவு செய்தவர்களுக்கான சட்டம் இது.  

மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான இறையாண்மை உரிமை இது. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். எனவே, சி.ஏ.ஏ சட்டம் திரும்பப் பெறப்படாது. அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று இந்தியா கூட்டணிக்கே தெரியும். பா.ஜ.க.வும் மோடி தலைமையிலான அரசும், சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை ரத்து செய்வதில் சாத்தியமில்லை. இதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காமல் இருக்க நாடு முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு செய்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றைச் செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு.

சி.ஏ.ஏ குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. எனவே, சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை” என்று கூறினார்.