ADVERTISEMENT

“நிதிஷ்குமார் செய்தது நம்பிக்கை துரோகம்” - ஜெய்ராம் ரமேஷ்

11:03 AM Jan 29, 2024 | mathi23

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, நேற்று (28-01-24) காலை தனது பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதிஷ்குமார், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய ஒரு கூட்டத்தை அழைத்தார். 18 கட்சிகளும் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னாவிற்குச் சென்றோம். அதன் பிறகு, இந்தியா கூட்டணி உருவாகி பெங்களூர், மும்பை அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். நிதிஷ்குமார், அனைத்து கூட்டத்திலும் பங்கேற்றார்.

அவர் இந்தியா கூட்டணியில் இருந்து உறவை முறித்துக் கொள்வார் என்று எந்தவித அறிகுறியையும் தரவில்லை. அவர் கடைசி நேரத்தில் நம் கையை விட்டு வெளியேறியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது முழு நம்பிக்கை துரோகம். அவர் செய்த துரோகத்துக்குப் பீகார் மக்கள் விரைவில் அவருக்கு பதலளிப்பார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT