ADVERTISEMENT

“நிதிஷ்குமாருடன் கார்கே பலமுறை பேச முயன்றார்” - ஜெய்ராம் ரமேஷ்

07:44 PM Jan 27, 2024 | mathi23

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். மேலும், நிதிஷ்குமார் இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தற்போது தகவல் வெளியாகி வருகின்றன. இது பீகார் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியா கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணியில் சில பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு பா.ஜ.க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ்குமார். அவருடன் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை பேச முயன்றார்.

ஆனால், இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜுன கார்கே நிதிஷ்குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ்குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார். விரைவில் இருவரும் பேசி பிரச்சனையை தீர்ப்பார்கள். இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது. அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT