“பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

jaipur BJP MLA says How can women breathe if they wear hijab?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனையடுத்துஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக சிறப்பு விருந்தினராக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, பாலமுகுந்த் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அப்பள்ளிக்கு சென்றார்.

அப்போது அவர், அங்கு ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. ஹிஜாப் அணிந்திருந்தால் எப்படி சுவாசிக்க முடியும்” என்று ஆட்சேபனைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதோடு ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியுள்ளார். இதை, இஸ்லாமிய மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Hijab jaipur protest
இதையும் படியுங்கள்
Subscribe