Jagan Mohan Reddy's volunteer passed away hit by car

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் தொண்டர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்குமுன்பு தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 18ஆம் தேதி ரெண்டபல்லா கிராமத்திற்குச் சென்றுள்ளார். எட்டுகுரு புறவழிச்சாலை வழியாக சென்ற போது, அவரது காரை அவரது கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

Advertisment

அதில் கட்சித் தொண்டர் ஒருவர், ஜெகன் மோகன் ரெட்டிக்கு மலர்கள் தூவ முயன்றார். அப்போது பெருந்திரளான கூட்டத்தில் அந்த தொண்டர் தவறி விழுந்து ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் சக்கரத்தில் கீழ் சிக்கினார். இந்த விபத்தில் அவரது உடல் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் சிக்கி உயிரிழந்தவரின் பெயர் செலி சிங்கையா (55) என்பது தெரியவந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் காரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.