
சினிமாவில் கூட இத்தனை உணர்ச்சிமயமான காட்சியைப் பார்த்திருக்கமுடியாது. அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் விஜயவாடாவில் நடந்துள்ளது.

விஜயவாடாவில் உள்ள துணை சிறையில் வல்லபனேனி வம்சியைச் சந்திப்பதற்காக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வந்திருந்தார். அப்போது சாலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அவர் வந்த வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பரித்தனர். அந்தக் கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது அபரிமிதமான பாசம் வைத்துள்ள ஒரு சிறுமி, அவருடன் செல்பி எடுக்கவேண்டும் என்று தன் தந்தையிடம் அடம்பிடித்ததோடு, வாய்விட்டு அழவும் செய்தார். பரபரப்பான அந்தச் சூழ்நிலையிலும், சிறுமியின் அழுகுரலைக் கேட்டு இரண்டு கைகளையும் நீட்டினார் ஜெகன்மோகன் ரெட்டி. அந்தச் சிறுமியைத் தூக்கிவிட்டனர்.

முகத்தில் பரவசம் பொங்கிட அந்தச் சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி. பதிலுக்கு அந்தச் சிறுமியும் ஜெகன்மோகன் நெற்றியில் முத்தமிட்டார். அடுத்து அந்தச் சிறுமி, தான் வைத்திருந்த செல்போனில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு, ஃப்ளையிங் கிஸ்ஸும் கொடுத்தார். மனதை நெகிழச்செய்யும் இந்தக் காட்சியின் வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.