Skip to main content

விசாரணைக்காக சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மோகன் ரெட்டி...

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை நேரில் ஆஜரானார்.

 

Jagan Mohan Reddy appeared at CBI court, in connection with disproportionate assets case

 

 

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ .1,172 கோடியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க தொழிலில் அவர்களுக்கு சாதகமாக மாநில அரசிடமிருந்து உதவி பெற்று தந்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்மூலம் கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கில் அவர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012 மே மாதம் அவரை கைது செய்து 16 மாதங்கள் சிறையில் அடைத்தது. 16 மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  

அவர் மீதான இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் முதல்வராக பதவியேற்ற பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெகன்மோகன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே ஜெகன்மோகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து 10 முறை விலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மீண்டும் விலக்கு அளிக்க மறுத்துவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான் என கூறிய நீதிமன்றம், ஜெகன்மோகன் ஜனவரி 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 820 கோடி பரிவர்த்தனை; வெளியான அதிர்ச்சி தகவல்! 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
820 crore transaction; Shocking information released

யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் 41 ஆயிரம் பேரின் கணக்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் ரூ. 820 கோடி பரிவர்த்தனை நடைபெற்றன. இதேபோன்று பிற வங்கிகளில் இருந்தும் 14 ஆயிரம் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது குறித்து யூகோ வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் யூகோ வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தனிநபர் தொடர்பான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக இரண்டாவது நாளாக ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் 67 இடங்களில் இன்று (07.03.2024) சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

மத்திய ஆயுத படையினர், காவலர்கள், சிபிஐ அதிகாரிகள் கொண்ட 40 குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் யூகோ, ஐடிஎப்சி ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரு ஹார்டு டிஸ்க், 40 செல்போன்கள், 43 டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அகிலேஷ்; சம்மன் அனுப்பிய சி.பி.ஐ

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
CBI summons Akhilesh Yadav for malpractice suit

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், பொதுப்பணித்துறையினர் சட்டவிரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசியப் பதுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருந்த போதும் சட்டவிரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை நடத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், சி.பி.ஐ கடந்த 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்வர் அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று (29-02-24) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 7 முறை அவர் ஆஜராகாத நிலையில், 8வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.