Skip to main content

டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் ஐடி ஊழியர்கள்; தொடர்மழையால் ஏற்பட்ட நிலை 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

IT staff going to office in tractors; Condition caused by continuous rain in bangalore

 

பெங்களூருவில் தொடரும் கனமழையின் காரணமாக ஐடி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் டிராக்டர்களில் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   குறிப்பாக பெங்களூரு, ரெயின்போ டிரைவ் லேஅவுட், ஷார்ஜா நகர்  போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி  நீர் சாலைகளில் புகுவதால் 2 அடிக்கும் அதிகமான நீர் சாலைகளில் காணப்படுகிறது. சுரங்கப்பாதைகள் மொத்தமும் நீரில் மூழ்கியுள்ளன. ரயில்வே பாலங்களின் அடியில் மழைநீர் 3 அடி வரை தேங்கியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலும் கணுக்கால் வரை நீர் சூழ்ந்ததால் பயணிகள் அவதியுற்றனர். 

 

பெங்களூருவில் நேற்று முன்தினம் 16செமீ மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல ஏரிகள் நிரம்பி வழிவதாலும் மழைநீர் வடிகால்கள் நிரம்பி மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வேலைகளுக்கு செல்பவர்களும் படகுகளிலும் ட்ராக்டர்களிலும் மழைநீர் தேங்கிய சாலைகளை கடக்க வேண்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களையும் டிராக்டர்களை கொண்டே மீட்கின்றனர். 

 

கடந்த கொரோனா காலத்தில் அலுவலர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ததால் பலகோடி ரூபாய் லாபம் என அறிவித்த நிறுவனங்கள் தற்போது 225 கோடிக்கும் அதிகமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு பல நிறுவனங்கள்  30% ஊழியர்களை மட்டுமே அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக அனைத்து ஊழியர்களையும் அடுத்த சில தினங்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. 

 

ரயில்வே பாலங்கள் இருக்கும் மெஜஸ்டிக், ஒகலிபுரம், கஸ்தூரிநகர் போன்ற பகுதிகளில் பாலத்திற்கு அடியில் வாகனங்கள் செல்லும் சாலைகளில் 3 அடிக்கும் மேல் நீர் சூழ்ந்துள்ளது. ஒயிட்ஃபீல்ட், கோட்டிகெரே, பன்னர்கட்டா சாலை, விஜயநகர், ராஜாஜிநகர், பசவேஷ்வர் நகர், யஷ்வந்த்பூர், பீன்யா, லாகரே, நந்தினி லேஅவுட், மல்லேஸ்வரம், சேஷாத்ரிபுரம், ஹெப்பால், சஞ்சய்நகர், ஆர்.டி.நகர், நாகவாரா, ஹென்னூர், பானஸ்வாடி, ஆர்.ஆர்.நகர் போன்ற பகுதிகள் மழைநீரால் பலத்த சேதம் அடைந்துள்ளது. 

 

மழைநீர் வெள்ளத்தால் ஆங்காங்கு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களும் கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும் நடக்கின்றது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை குழுக்களை அனுப்ப முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''அதெல்லாம் சரி... ''- எதிர்பார்த்து ஏமாந்த தூத்துக்குடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Modi did not open his mouth about it; Tuticorin is a disappointment

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில், நடைபெற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன' என்றார்.

அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பேரிடர் காரணமாக மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான நிவாரணத்தை அறிவித்திருந்த போதிலும் மத்திய அரசிடமும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அதற்கான நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று பல்வேறு வகைகளில் கோரிக்கை வைத்திருந்தது.

ஒரு கட்டத்தில் கோரிக்கையானது மோதலாக உருவெடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதிக்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழலில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, தேர்தல் கவனத்திற்காவது மத்திய அரசு சார்பில் வெள்ள நிவாரணம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பும் பிரதமரின் பேச்சில் இடம் பெறாதது தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான நெல்லைக்கு தற்போது சென்றுள்ள மோடி, அங்கு உரையாற்றி வரும் நிலையில் 'அதெல்லாம் சரிதான்.. அங்காவது வெள்ள நிவாரணம் குறித்து வாய் திறப்பாரா?' என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.