'Is this the sign that protects women?' - Anbumani strongly condemns Photograph: (pmk)
சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி நடைபெறும் பகுதியில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த ஒரு கும்பல் அவரது மனைவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை என மொத்த குடும்பத்தையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த சடலங்களை வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வீசி சென்றுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு குப்பைப் பகுதியிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சடலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, அதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலமானது கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனைவியின் சடலத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை அடையாறு பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க வந்த அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததுடன், இளம்பெண்ணையும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது. அமைதியான நகரம் என்று பெயர் பெற்ற சென்னையை வாழத்தகுதியற்ற கொலைநகரமாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அடையாறு பகுதியில் முதலில் பிகார் இளைஞர் ஒருவர் மட்டும் தான் முதலில் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து வெளியான செய்திகள் திகில் படத்தின் காட்சிகளுக்கு இணையாக உள்ளன. பிகார் இளம்பெண்ணையும், அவரது கணவர் மற்றும் குழந்தைகளையும் படுகொலை செய்த அந்தக் கொடூரக் கும்பல், அத்துடன் நிற்காமல் மூவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றிருக்கிறது. இப்படி ஒரு கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடிய 48 மணி நேரத்திற்குள் இந்தக் கொடூரம் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று பெயர்பெற்ற மாநிலத்தி்ற்கு வாழ்வாதாரம் தேடி வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், குடும்பத்தையே கொலை செய்யும் நிலை நிலவுகிறது என்றால் தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது? என்று உலகம் காறி உமிழாதா?
இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று கூறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நா கூசவில்லையா? திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியில் கஞ்சா வணிகர்கள் தான் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும்; திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அவர்கள் காத்திருக்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
Follow Us