ஒற்றை நபர் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றமுடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இன்றைய தேதியில் அது முடியும் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி இந்தியாவின் அரசியலை நிர்ணயிக்கும் ஒரு தனி நபர் தான் பிரசாந்த் கிஷோர்.கடந்த 2014 பாஜக வெற்றி முதல் தற்போதைய தேர்தல் வரை இந்தியாவின் பல ஆட்சியாளர்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பவர் பிரசாந்த் கிஷோர். இந்தியாவின் முதன்மை அரசியல் கணிப்பாளரான அவர், ஐபிஏசி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்து தருவது தான் இந்த அமைப்பின் வேலை.

Advertisment

ipac head prashant kishore strategies in elections

ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி படத்தில் வரும் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தின் நிஜ வெர்சன் இவர்தான். கடந்த 2012 ஆம் ஆண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தான் இவர் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தார். அந்த தேர்தலில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடியுடன் இணைந்துபாஜகவை வெற்றியடைய வைத்தார். அதன்பின் 2014 மக்களவைத் தேர்தலிலும் மோடிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்தார். இதிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பின்னர் 2015-ல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்து வெற்றிபெற வைத்தார். அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கைகோர்த்து, அங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைத்தார். அதுபோல இப்போது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பணியாற்றினார்.

Advertisment

இவரின் தேர்தல் வியூகங்களை கண்ட ஜெகன்மோகன் 2 ஆண்டுகளுக்கு முன்னரே இவருடன் இணைந்தார். இதனையடுத்து பிரசாந்த் வகுத்துக்கொடுத்த வியூகத்தின்படி 15 மாதங்களில் 3,000 கி.மீ. பயணம் செய்து இரண்டரை கோடி மக்களை சந்தித்தார் ஜெகன்மோகன். ஒட்டுமொத்த மக்களையும் 'ஜெகன் அண்ணா அழைக்கிறார்' என்ற போஸ்டர்களால் கவர்ந்து பொது மக்களையே ஜெகன்மோகனை அண்ணா என அழைக்க வைத்தார். ஜெகனின் பிம்பம் ஒருபுறம் உயர மற்றொரு புறம் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கை சரிக்கவும் திட்டங்களை தீட்டினார்.

’உங்களை நம்பமாட்டோம் பாபு', ‘பை-பை பாபு' ஆகிய வாசகங்களுடன்கூடிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பரப்பப்பட்டது. அவரின் இந்த வியூகங்கள் சரியான முறையில் வேலை செய்தன. இது ஆந்திர சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. இப்படி கடந்த பல தேர்தல்களில் இந்திய நாட்டின் பல அரசுகளை ஆட்சியில் அமர்த்துவது ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய அமைப்பு என்பது ஒரு வியத்தகு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.